எலந்தகுட்டையில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போட அழைப்பு
பள்ளிபாளையம், ஏப்.25: எலந்தகுட்டை அரசு கால்நடை மருந்தகத்தில், நாளை வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என கால்நடை மருத்துவர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மருத்துவர் உமேஷ் பூபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: நாளை (26ம் தேதி), உலக கால்நடை தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு எலந்தகுட்டை கால்நடை மருந்தகத்தில், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. நாய்களால் ஏற்படும் இந்த வெறிநோயினை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களை கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு வந்து, இலவசமாக தடுப்பூசி போட்டுச்செல்லாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.