புதிய பஸ் நிலையத்திற்குள் பைபாஸ் ரைடர் பஸ்கள் வர வேண்டும்: அனைத்து கட்சியினர் மனு
விருதுநகர், அக்.2: விருதுநகர் புதிய பஸ் நிலையத்திற்குள் பைபாஸ் ரைடர் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி மக்கள் போராட்டக்குழுவினர் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி மக்கள் போராட்டக்குழுவினர் மனு அளித்தனர். மனுவில், விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை அனைத்து அரசுத்துறைகள் மூலம் செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி, விருதுநகர் புதிய பஸ் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
ஆனால் சாத்தூர் மற்றும் திருமங்கலத்திற்குள் வந்து செல்லும் பைபாஸ் ரைடர் எனும் தொலைதூர பஸ்கள் மாவட்ட தலைநகரான விருதுநகர் புதிய பஸ் நிலையத்திற்கு பகலில் மிக குறைவாகவும், இரவில் முழுவதுமாக வந்து செல்வதில்லை. திருநெல்வேலியில் இருந்து விருதுநகர் அல்லது மதுரையில் இருந்து விருதுநகர் வரும் பயணிகளை பஸ்களில் ஏற்ற நடத்துனர், ஓட்டுநர்கள் அனுமதிப்பதில்லை.
இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன், மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பைபாஸ் ரைடர் பஸ்கள் விருதுநகர் புதிய பஸ் நிலையம் வராமல் நான்குவழிச்சாலையில் செல்வதால் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்துவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.