வழக்கம் போல் பஸ்கள், ஆட்டோக்கள், ரயில்கள் ஓடின அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது வேலூர் மாவட்டத்தில்
வேலூர், ஜூலை 10: அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் நேற்று வழக்கம்போல் பஸ்கள், ஆட்டோகள் இயங்கியது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஒன்றிய தொழிலாளர் விரோத சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். ஒப்பந்தம், அவுட் சோர்சிங், தற்காலிக முறைகளை ஒழித்திட வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, எச்.எம்.எஸ்., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஏஐடியுசி, மதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி நேற்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க வில்லை. வேலூர் மாவட்டத்திலும் நேற்று காலை வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. வேலை நிறுத்தத்தையொட்டி, மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகள் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் காலை முதல் வழக்கம் போல் இயங்கின. ரயில்கள் இயங்கியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆட்டோக்கள், வாடகை கார், வேன்கள் இயங்கவில்லை. கடைகள் அனைத்தும் வழக்கம் போல் திறந்திருந்தன. போராட்டத்தில்
இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டமும், வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. வேலூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்கு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் சில அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது. மறியல் போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.