அண்ணனை கடித்து குதறிய தம்பி கைது வந்தவாசி அருகே வரப்பு தகராறு
வந்தவாசி, செப். 29: வந்தவாசி அருகே வரப்பு தகராறில் அண்ணனை கடித்து குதறிய தம்பியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கோவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தீர்த்தமலை(48) விவசாயி. இவரது தம்பி ரவிச்சந்திரன்(41) பெயிண்டர். இருவருக்கும் சொந்தமான விவசாய நிலம் அதே கிராமத்தில் அருகருகே உள்ளன. இதில் இருவருக்கும் வரப்பு சொந்தம் கொண்டாடுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி அன்று தீர்த்தமலை வரப்பு பகுதியை மண்வெட்டியால் சுத்தம் செய்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன் தீர்த்தமலையிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கி முகம் மற்றும் கைப்பகுதியில் கடித்து குதறியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தீர்த்தமலை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சம்பவம் குறித்து தீர்த்தமலை நேற்று பொன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தார்.