ராயக்கோட்டையில் பெல்ட் அவரைக்காய் சாகுபடி மும்முரம்
ராயக்கோட்டை, ஜூலை 8: ராயக்கோட்டை பகுதியில், குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் தரும் பெல்ட் அவரைக்காயை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் அதிக அளவில் பெல்ட் அவரைக்காயை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதை சாகுபடி செய்ய பந்தல் அமைக்க தேவையில்லை. சொட்டு நீர் பாசனம் மட்டும் போதும். விதை நட்ட 45 நாட்களில் செடியாக வளர்ந்து, பூ பூத்து பெல்ட் அவரைக்காய் அறுவடைக்கு வருகிறது. இது கொடியாக வளராமல் செடியாக மட்டுமே வளர்ந்து காய்களை தருகிறது. அதிக பாசன பரப்பு இருந்தாலும் நீர்தேவை குறைவு என்பதாலும், மற்ற பயிர்களை விட, விவசாயிகள் அதிகம் பெல்ட் அவரைகாயை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். பெல்ட் அவரைக்காயை அதிக அளவில் வெளியூர் வியாபாரிகள் விற்பனைக்கு வாங்கிச்செல்கின்றனர். கிலோ ரூ.40க்கு குறையாமல், மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். மற்ற காய்கறிகளைப்போல விலை வீழ்ச்சியடையாமல் விற்பதால், விவசாயிகள் அதிகளவில் விளைச்சல் செய்துள்ளனர்.