ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயத்தில் ரூ.1.38 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள்
ஜெயங்கொண்டம், ஜூலை 10: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றியம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியை, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி கலெக்டர் ரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி சுற்றுலாத் துறை அமைச்சரால் 2024-25ம் ஆண்டு வரவு செலவு கூட்டத்தொடரில் அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயப் பகுதிகளில் ரூ.1.38 மதிப்பீட்டில் கழிவறைகள், பேவர் பிளாக் சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், தேவலாயப் பகுதி நுழைவு வாயில், ஆர்.ஓ.பிளாண்ட், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயப் பகுதியில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; தமிழ்நாட்டில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் அனைத்து இடங்களிலும் வழக்கம்போல் இயக்கப்பட்டு பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி பயணம் மேற்கொள்கின்றனர் .இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் உதவி சுற்றுலா அலுவலர் வரதராஜன், ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாய பாதிரியார் தங்கசாமி மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.