கும்பகோணம் அருகே மாம்பழங்களின் ஊட்டச்சத்து குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கும்பகோணம், ஜூலை 23: கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய மாம்பழ தினத்தை முன்னிட்டு மாம்பழங்களின் ஊட்டச்சத்தை உணர்த்தும் விதமாக மாணவ மாணவிகள் மாம்பழம் போல் வேடமடணிந்து அதில் நிறைந்துள்ள சத்துக்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22ம் தேதி தேசிய மாம்பழ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய மாம்பழ தினத்தை முன்னிட்டு எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி மாணவர்கள் மாம்பழ உடை அணிந்து அழகாக தோற்றமளித்தனர். மேலும் மாம்பழம் குறித்த பாடல்களுக்கு நடனமாடியும், மாம்பழங்களின் ஊட்டச்சத்தை உணர்த்தும் விதமாக மாணவ, மாணவியர்கள் மாம்பழம் போல் வேடம் அணிந்து அதில் உள்ள சத்துக்கள் பற்றி எடுத்துரைத்தனர்.
அப்போது பள்ளியின் கலையரங்கத்தில் பல்வேறு மாம்பழ வகைகளான ருமானி, ஒட்டு, மல்கோவா, நீலம், பங்கனப்பள்ளி போன்றவற்றை அழகாக வைத்து அலங்காரம் செய்து இருந்தனர். மாம்பழத்தில் பல்வேறு உருவ பொம்மைகளை செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர்கள் கார்த்திகேயன், பூர்ணிமா கார்த்திகேயன், மாணவ,மாணவியர்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.