குட்கா பதுக்கி விற்ற ஆட்டோ டிரைவர் கைது
ஒடுகத்தூர், ஜூலை 26: சித்தூரில் இருந்து கடத்தி வந்து குட்காவை பதுக்கி விற்ற ஆட்டோ டிரைவரை வேப்பங்குப்பம் போலீசார் கைது செய்தனர். ஒடுகத்தூர் அடுத்த அத்திக்குப்பம் புதுமனை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அங்குள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், கடை உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த வேலு(35) என்பதும், அவ்வப்போது ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.மேலும், சித்தூர் அடுத்த பலமநேர் பகுதியில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்க செல்லும் போதெல்லாம், அப்பகுதியில் இருந்து குட்கா உட்பட போதை பொருட்களை வாங்கி வந்து, அவரது கடையில் பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து வேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.