மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு கணவன் 2வது திருமணத்தால் விரக்தி
திருவண்ணாமலை, ஜூலை 9: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கலசபாக்கம் தாலுகா படிஅகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு மனைவி சிவகங்கா(40). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக நேற்று சிவகங்கா வந்திருந்தார். அப்போது, திடீரென பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விரைந்துச் சென்று தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தன்னையும் தன் குழந்தைகளையும் கவனிக்காததால் விரக்தி அடைந்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். மேலும், கணவர் மீது நடவடிக்கை எடுத்து, தனது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், தீக்குளிக்க முயற்சிப்பது சட்டப்படி குற்றம் என எச்சரித்து அனுப்பினர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.