நாளுக்குநாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் திருத்தணி கோயிலில் ரூ.26 கோடியில் 4 தளங்கள் கொண்ட அன்னதான கூடம்: சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தகவல்
திருவள்ளூர், ஜூலை 9: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் எஸ்.காந்திராஜன் தலைமையில், கலெக்டர் மு.பிரதாப், மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் இராம.கருமாணிக்கம், சின்னதுரை, சேவூர் எஸ்.இராமச்சந்திரன், மு.பன்னீர்செல்வம், வெங்கடேஷ்வரன், ஈ.ராஜா, எஸ்.எஸ்.பாலாஜி, மாதவரம் எஸ்.சுதர்சனம், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது மதிப்பீட்டுக் குழுத் தலைவர் எஸ்.காந்திராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு 2024-25, 2025-26க்கான பணிகளை சட்டப்பேரவை தலைவரின் பரிந்துரையின் பேரில் அங்கீகரித்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்தாலும் தொடர்ந்து நிலுவையில் உள்ள பணிகளான ரூ.16.50 கோடி மதிப்பீட்டில் 500 நபர்கள் அமரக்கூடிய திருமண மண்டபம் மற்றும் ரூ.14 கோடி மதிப்பீட்டில் 100 பேர் வரை அமரக்கூடிய நான்கு திருமண மண்டபங்களின் பணிகள் 10 சதவீதம் நிறைவு பெறவில்லை. நிலுவையில் உள்ள காரணத்தை ஆய்ந்தறிந்து அறிக்கை வழங்குவது இக்குழுவின் முக்கிய நோக்கம் ஆகும். அனைத்து பணிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாதிரிகளுக்காக நிலுவையில் உள்ளது. நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை கூடும் காரணத்தினால் சிறியதாக உள்ள அன்னதான கூடத்தினை அகற்றி நான்கு தளங்கள் கொண்ட கட்டிடம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் விரைவில் கட்டப்படவுள்ளது.
மேலும் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் பராமரிப்பின்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் அதனை சரி செய்ய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட துணைச் செயலாளர்கள் மூலம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட உள்ளது. இதன் மூலம் முதலமைச்சருக்கும் இவ்வறிக்கை கொண்டு செல்லப்படும். இன்னும் சிறப்பான பணிகளை மேற்கொள்ள இக்குழுவின் கருத்து பயனுள்ளதாக இருக்கும். தரமான விதைகளை தனியாரிடம் கிடைப்பதில்லை என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு கடைகள் சீல் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவேரிராஜபுரம் சிட்கோவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தனியாரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இணையதளம் வாயிலாக பெறப்பட்ட 27 விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளது. திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் உரிய ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளோம். சம்பந்தப்பட்ட அனைத்து துறை செயலாளர்களையும் நேரில் வரவழைத்து அனைத்து பணிகளையும் தொய்வின்றி விரைந்து முடிக்க அறிவுறுத்த உள்ளோம். அரசு பணத்தை சிக்கனமான முறையில் செலவழிக்க இது வழிவகுக்கும். இவ்வாறு பல்வேறு பணிகளை இக்குழு ஆய்வு செய்து அறிக்கையாக வழங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருத்தணி வட்டம், காஞ்சிப்பாடி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வாயிலாக நடைபெறும் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம், தென்னங்கன்றுகள். காய்கறி விதைகள் உள்ளிட்டவற்றை வழங்கினர். மேலும் திருத்தணி வட்டம், காவேரிராஜபுரம் ஊராட்சியில் சிட்கோ வாயிலாக நடைபெறும் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, திருவள்ளுர் வட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டடப்பணிகளையும் ஆய்வு செய்தனர். இக்கூட்டத்தில் மதிப்பீட்டுக் குழு முதன்மைச் செயலாளர் சீனிவாசன், மதிப்பீட்டுக் குழு கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் ராஜவேல் மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கோயிலில் ஆய்வு
திருத்தணி முருகன் கோயிலில் ரூ.86.76 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை திருத்தணி முருகன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மலைக்கோயில் அன்னதான கூடத்தில் இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். பின்னர், அன்னதான கூடம் விரிவாக்கப் பணிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, ராஜகோபுரம் முதல் தேர்வீதி வரை இணைப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, மதிப்பீட்டு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், திருத்தணி முருகனை தரிசனம் செய்தனர். அப்போது, அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆய்வின்போது, இந்து சமய அறநிலைத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் அனிதா, கோயில் இணை ஆணையர் ரமணி, வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.