செழிப்பாக வளர்ந்துள்ள பணப்பயிர்... குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம் அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரியலூர், நவ. 15: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயண பேரணியினை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து தேசிய அளவிலான குழந்தைகள் தின விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் இன்று குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
எனவே பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமையினை தடுத்திட பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கேற்றவாறு குழந்தைகள் பாதுகாப்புடன் இருந்திட வேண்டும். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு முன்னதாக திருமணம் செய்வது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் அவ்வாறு செய்தால் ஒரு லட்சம் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக 1098 என்ற இலவச குழந்தைகள் உதவி மையத்தினை தொடர்பு கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் ரத்தினசாமி பேசினார்.
நடை பயண பேரணியில் அரசு அலுவலர்கள், கல்வியல் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இல்ல பணியாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக, குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், குழந்தைகள் நலக்குழுத்தலைவர் மீனாட்சி மற்றும் இதர அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.