அரியலூர் அண்ணா சிலை அருகே ஊரக வளர்ச்சித்துறை சங்கங்கள் ஆர்ப்பாட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்
அரியலூர், அக்.30: அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், தூய்மை காவலர்களின் மாத ஊதியத்தை ரூ.10,000 ஆக உயர்த்த வேண்டும். மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலம் வரை ஊதியத்தை காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு ரூ.15,000 சிறப்பு காலவருக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊராட்சி மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும்.
தூய்மை காவலர்களுக்கு குடும்ப நலநிதி திருத்தம் செய்து அவர்கள் இறந்தால் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சரவணன், பொருளாளர் முத்து, அமைப்புச் செயலர்கள் செல்வமணி, சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.