தா. பழூரில் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் 5ஜி செல்போன் கேட்டு ஆர்ப்பாட்டம்
தா.பழூர், ஆக.22: தா.பழூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு 5ஜி செல்போன் மற்றும் சிம் கார்டு வழங்க வேண்டும், ஆதார் எண் மற்றும் ஓடிபி, ஒய்எப்ஆர்எஸ் முறைகளை கைவிட வேண்டும், அங்கன்வாடி மையத்தில் கூடுதல் இணைய வசதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஒன்றிய தலைவர் உஷாராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொளஞ்சி நாயகி, பைரவி ,ஆரோக்கிய செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கலைச்செல்வி, பொருளாளர் வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சகுந்தலா கண்டன உரையாற்றினார். தொழிற்சங்க மாவட்ட தலைவர், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.