பைக் மீது பஸ் மோதி ஜல்லிக்கட்டு வீரர் பலி
பாடாலூர், நவ.21: பாடாலூர் அருகே பைக் மீது பஸ் மோதியதில் ஜல்லிக்கட்டு வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றுவிட்டு, நேற்று மதியம் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்தனர். அங்கு மதியம் உணவருந்தி விட்டு மீண்டும் ராணிப்பேட்டைக்கு பஸ்சில் சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவிளக்குறிச்சி பிரிவு சாலையில் பஸ்சை டிரைவர் திருப்பினார். அப்போது எதிர்பாரதவிதமாக அவ்வழியாக திருச்சி நோக்கி சென்ற பைக் மீது பஸ் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றிய தகவலறிந்த பாடாலூர் போலீசார் விரைந்து வந்து, பலியான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில், விபத்தில் உயிரிழந்த வாலிபர் பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் காட்டுக்கொட்டகை கிராமத்தை சேர்ந்த தேவசகாயம் மகன் திலீப்ராஜ் (23) என்பதும், ஜல்லிக்கட்டு வீரர் என்பதும் தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் இறந்த சம்பவம் அன்னமங்கலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.