கங்கைகொண்ட சோழபுரம் ரூ.1.32 கோடி மதிப்பிலான பிரகதீஸ்வரர் கோயில் நிலம் மீட்பு
ஜெயங்கொண்டம், நவ.19: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அரியலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமையில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள் ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பிலான இடங்கள் மீட்கப்பட்டன.
மேலும், கோவிலுக்கு சொந்தமாக சுவாதீனம் செய்யப்பட்ட இடங்கள் எனவும் தனிநபர் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் மீறினால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெயர் பலகை வைக்கப்பட்டது. மேலும், கோவிலுக்கு எதிரே தனி நபரால் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்திற்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். உதவி ஆணையர்/தக்கார் லட்சுமணன், திருக்கோயில் செயல் அலுவலர் செந்தமிழ்ச்செல்வி, தாசில்தார் கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.