காய்கறி பயிர்களில் தேமோர் கரைசல் பயன்பாடு தொழில்நுட்பம்
தா.பழூர், செப். 18: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் காய்கறி பயிர்களில் பயன்படுத்தப்படும் தேமோர் கரைசல் எவ்வாறு தயாரித்து, பயன்படுத்த வேண்டும் என தொழில்நுட்ப வழிமுறைகள் வழங்கி உள்ளனர். தேமோர் கரைசல் தயாரிக்க, ஐந்து லிட்டர் புளித்த மோர் மற்றும் இரண்டு லிட்டர் தேங்காய் பால் தேவைப்படும்.
முதலில், வெண்ணெய் நீக்கிய மோரை 4-5 நாட்கள் வரை ஒரு மூடிய பாத்திரத்தில் நன்றாகப் புளிக்க வைக்க வேண்டும், மண் பானையாக இருந்தால் புளிப்புத்தன்மை கூடும். புளித்த பிறகு, 2-3 தேங்காய்களில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு லிட்டர் தேங்காய்ப் பாலை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து, பயிர்களுக்கு இலை வழியே தெளிக்க வேண்டும். இதனால், மொட்டு உதிர்தலைத் தடுக்கிறது. பூக்கள் பூப்பதை ஊக்குவிக்கிறது.
பயிர்களுக்கு இலை வழி ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மண் வளத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின், 9786379600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு பயன்பெறலாம் என கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் தெரிவித்துள்ளார்.