மழையில் நனைந்த மக்காச்சோளம் சாலையில் உலர்த்தும் பணியில் விவசாயிகள்
தா.பழூர், செப். 18: அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயந்திரம் மூலம் மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விதைக்கப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்காச்சோள அறுவடை பணிகளானது சுத்தமல்லி, நடுவலூர், காசாங்கோட்டை, கோட்டியால், கார்குடி, பருக்கள், காட்டாகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2000 ஏக்கர் பரப்பளவில் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுவாக வறட்சியை தாங்கி வளரும் தன்மை உடையது சோளம். தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளிலும் சோளம் பயிரிடலாம். இது தானியமாகவும், கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமானதாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. சோளம் சாகுபடியில் பெரும்பாலும் நாட்டு சோளம் ரகத்தையே விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, சோளம் அறுவடை பணி நடைபெறும் நிலையில் சோளத்தின் ஈரப்பதன்மையை குறைக்க அதனை காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது, அனைத்து பகுதிகளிலும் சோளம் அறுபடை நடைபெறும் நிலையில், சோளத்தை உலர்த்துவதற்கு போதிய இடம் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் தா.பழூரில் இருந்து அரியலூர் செல்லும் சாலையின் ஓரங்களில் சோளத்தைக் கொட்டி உலர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக சோளத்தை முழுமையாக உலர்த்தி விற்பனை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்பொழுது அனைத்து விவசாயிகளும் அறுவடையை துவங்கியிருக்கும் நிலையில் சோளத்தின் விலை நாளுக்கு நாள் குறைவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். எனவே சோளத்தில் விலை வீழ்ச்சி அடையாமல் இருக்க நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.