அரியலூர் ரயில் நிலையத்தில் அரசு கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி
அரியலூர், ஆக.15: அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் நேற்று ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி மேற்கொண்டு தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அரியலூர் ரயில் நிலையத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில் நேற்று தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக வைகை ரயிலுக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்திருந்த பயணிகளிடம் மற்றும் ரயிலில் பயணம் செய்த பயணிகளிடம் தூய்மை சேவைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்கள் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மாணவர்கள், தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்து ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசுக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் கருணாகரன், பன்னீர்செல்வம், ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் அபிராமி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.