அரியலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு
அரியலூர், அக். 13: அரியலூர் மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணிகளுக்கான தேர்வு நடைபெறும் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட 13 முதன்மை பாடங்களுக்கான தேர்விற்கு 3875 அரியலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்தனர். அரியலூர் மாவட்டத்தில் 15 தேர்வு கூடங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு வருகை புரிந்தவர்கள் 3625, தேர்வு எழுத வருகை புரியாதவர்கள் 250 நபர்கள்.
மேலும், தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் அனைத்து தேர்வு கூடங்களுக்கும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.சிவராமன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.