அரியலூரில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், பணியாளர்கள் 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
அரியலூர், செப்.12: அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்பட 10 நபர்களுக்கு கலெக்டர் ரத்தினசாமி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் அரியலூர் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இப்பேரவை கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்களில் கட்டமைப்பை மேம்படுத்திடவும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் தடையின்றி வழங்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 10 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் மணிவண்ணன், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் முத்துக்கிருஷ்ணன், துணை இயக்குனர் (குடும்ப நலம்) மருத்துவர் ஜெயந்தி, ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் வட்டார மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.