தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமரசம் செய்து கொள்ளலாம்
அரியலூர், செப். 11: அரியலூர் , ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை (செப்.13) நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமரசம் செய்துக் கொள்ளலாம் என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான மலர்வாலண்டினா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு ஆணையின்படி மேற்கண்ட நீதிமன்றங்களில் 13ம் தேதி நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு காண வாய்ப்புள்ளது. இதனால், இரு தரப்பினர்களும் நீதிமன்றத்தில் கட்டணமாக செலுத்தியுள்ள முழுத்தொகையையும் திருப்பி பெற்றுக்கொள்ளலாம். சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. தரப்பினர்களுக்கு வெற்றி, தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது. எனவே, பொதுமக்கள், வழக்காடிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது தொடர்பாக மேற்கண்ட நீதிமன்றங்களில் செயல்படும் சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329 223333 என்ற தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.