மலேசியாவில் இறந்தவரின் உடல் குன்னத்திற்கு இன்று கொண்டு வரப்படுகிறது
குன்னம், ஆக. 7: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், காமராஜர் நகர், வடக்கலூர் கிராமத்தைச்சேர்ந்த ரமேஷ் என்பவர் மலேசியா நாட்டில் சிலான்கூர் என்ற இடத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 02.08.2025 அன்று மதியம் இறந்துவிட்டதாகவும், தனது கணவரின் உடலை கொண்டு வருவதற்கு 5 லட்சம் ரூபாய் பணம் கேட்பதாகவும், தனது கணவரின் வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்துவதாகவும், வறுமையான நிலையில் அவ்வளவு பணம் இல்லை.
எனவே, தனது கணவர் உடலை மீட்டு இந்தியா கொண்டு வருமாறு அவரின் மனைவி காவேரி என்பவரும், இறந்தவரின் தாயாரும் கடந்த 03.08.2025 அன்று போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். கடந்த 4ம் தேதி அன்று மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை துறை அமைச்சர், மாவட்ட கலெக்டரிடம் கேட்டு கொண்டார்.
இதையடுத்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் 04.08.2025 அன்று அயல்நாட்டினர் துறையின் அரசு செயலாளர், அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையருக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுத்ததால், ரமேஷ் அவர்களின் உடல் மீட்கப்பட்டு மலேசியா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் கொண்டு வரப்படும் அவரது உடல் நேற்று (6ம் தேதி) இரவு 11.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.இன்று (7ம் தேதி) அதிகாலை 2.30 மணியளவில் குன்னத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் நடவடிக்கையால் இந்த பணி துரிதமடைந்துள்ளது.