அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர், ஆக. 7: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பேராசிரியர் பணி மேம்பாட்டினை கால தாமதமின்றி உடனடியாக வழங்கிட வேண்டும். மூத்த அரசு கல்லூரி பேராசிரியரை கல்லூரி கல்வி இயக்குநராக நியமனம் செய்ய வேண்டும்.
அண்ணாமலை பல்கலைக்கழக மிகை ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்ய கூடாது. காலியாக உள்ள கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும். கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் கிளைத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். செயலர் ஸ்டீபன், திருச்சி மண்டல துணைத் தலைவர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.