காரை கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது
பாடாலூர், அக். 4: பெரம்பலூர் எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் வரகுபாடி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் எஸ்ஐ ரமேஷ் தலைமையில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா முருகூர் கிராமத்தைச் சேர்ந்த பத்மநாதன் (55) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 100 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து, பத்மநாதனை பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையிலடைத்தனர்.