தா.பழூர் அருகே வேளாண் அறிவியல் மையத்தில் தேசிய ஒற்றுமை தினம்
தா.பழூர், நவ.1: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சோழமாதேவியில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த நாளை ஒட்டி தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாக மையத்தின் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா வரவேற்புரை ஆற்றினார். இந்த மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடுவதற்கான காரணம் மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் வரலாறு ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வேளாண் அறிவியல் மைய பண்ணையின் செயல் விளக்க திடல்கள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய திடல்கள் அனைத்தும் கண்டுணர்வு சுற்றுலாவாக காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், மகளிர் பள்ளி மாணவ, மாணவிகள் என 78 பேர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். நிறைவாக உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் திருமலைவாசன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.