விக்ரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 25ம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: அமைப்புசாரா தொழிலாளர்கள் கலந்து கொள்ளலாம்
அரியலூர், அக். 23: விக்ரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 25ம் தேதியன்று நடக்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத அமைப்புச்சார தொழிலாளர்கள் பங்கேற்று யன்பெறலாம் என கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவரது செய்திக்குறிப்பு:
தொழிலாளர் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் இதர 19 அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூகப்பாதுகாப்பு மற்றும் நலவாரியம், தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 20 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பதிவு பெற்ற அமைப்புச் சாராத் தொழிலாளர்களுக்கு நோய்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் நோய்களை கண்டறிந்து அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், விக்ரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 25 அன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. எனவே, இம்முகாமில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத அமைப்புச்சார தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் முகாமிற்கு வரும் போது கீழ்க்கண்ட ஆவணங்கள் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மருத்துவ முகாமிற்கு வரும் பதிவு பெற்ற அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் ,ஆதார் அடையாள அட்டை, பதிவு நலவாரிய அடையாள அட்டை, இதற்கு முன்பு சிகிச்சை பெற்ற விவரங்கள் மருத்துவ முகாமிற்கு வரும் பதிவு பெறாத அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கபட்ட கைப்பேசி எண், ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயதிற்கான ஆவணம், பணிச் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ்)-1 ஆகியவற்றுடன் வந்து அமைப்புச்சாரா மற்றும் கட்டுமானத்தொழிலாளர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.