செவ்வாய்தோறும் படியுங்கள் அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
அரியலூர், அக். 23: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ரத்தினசாமி, காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
ரயில்வே சுரங்கப்பாதை ஆய்வு
செந்துறை ஊராட்சி ஒன்றியம், முல்லையூர் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு தற்போது வரை முடிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாற்றுப்பாதை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதன் விவரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டதுடன், பாதையின் இருபுறங்களில் உள்ள மழைநீர் வெளியேறும் வசதிகள் முறையாக ஏற்படுத்திடவும், மழைநீர் தேங்காத வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
பாலம் கட்டும் பணிகள்
தளவாய் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ஆணைவாரி ஓடை முதல் ஐஊடு புயவந சாலையில் ஆணைவாரியின் ஓடையின் குறுக்கே ரூ.263.61 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் கட்டுதல் பணிகளை பார்வையிட்டு, பணிகளின் விவரம், கட்டுமானப் பொருட்களின் தரம், கரைகள் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்ததுடன், தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாதை மழையின் காரணமாக சேதமடைந்துள்ளதை விரைவாக சரிசெய்திடவும், மழைநீர் அதிகமாக வந்தால் பாலப்பணியை தற்காலிக பாதை அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை மேற்கொள்ளவும், எஞ்சியுள்ள பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
நீர்நிலைகள் கண்காணிக்க உத்தரவு
செந்துறை ஒன்றியம், செந்துறை ஊராட்சி, தளவாய் ஊராட்சி, ஈச்சங்காடு கிராமம், அயன்தத்தனூர் ஊராட்சி, ஆர்.எஸ்.மாத்தூர் ஊராட்சி, அசாவீரன்குடிகாடு ஊராட்சி ஆகிய பகுதிகளில் வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, நடந்த ஆய்வுக் கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் காணொலிக் காட்சி வாயிலாக வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டு, தொடர்ந்து மழை அளவை கண்காணித்திட வேண்டுமெனவும், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம், நீர் இருப்பு ஆகியவை குறித்து தொடர்ந்து கண்காணித்திட வேண்டுமெனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பயிற்சிபெற்ற காவலர்கள் தயார்நிலை: மேலும், ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்குவதற்கான நிவாரண மையங்கள் ஏற்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் வழங்குதல் தொடர்பாகவும், மாநில பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற காவலர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மீட்பு உபகரணங்கள் தயார்
போதிய மருத்துவ வசதி ஏற்படுத்துதல், மழைநீர் வடிகால்கள் பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு அடியில் உள்ள அடைப்புகளை அகற்றுதல், மீட்பு உபகரணங்களான ஜே.சி.பி, ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவி, டார்ச் லைட், போன்ற உபகரணங்களை போதிய அளவில் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்தும், பருவமழை காலங்களில் மின்சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்கிடவும், பருவமழையின் காரணமாக மின்கம்பங்கள் ஏதும் சேதமடைந்தால் உடனடியாக மின்கம்பங்கள் மாற்றியமைப்பதற்கு தேவையான மின்கம்பங்களை இருப்பில் வைத்து கொள்ள வேண்டும்.
அபாயகரமான கட்டிடங்கள் இடிப்பு
வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது குறித்தும், அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை கண்டறிந்து அவைகளை உடனடியாக இடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் அக்கட்டிங்களை முழுமையாக பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டுமெனவும், சாலையோரங்களில் மரங்கள் சாய்ந்து விழும்போது உடனடியாக அதனை பாதுகாப்பாக அகற்றி போக்குவரத்தினை சீர்செய்திட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சீரான குடிநீர் வழங்க வேண்டும்
நகராட்சி, பேரூராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டுமெனவும், பருவமழையின் காரணமாக சேதமடையும் பயிர்கள் குறித்த விவரங்களை வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து உரிய கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டுமெனவும், தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ள 28 இடங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் ஒரு மாதத்திற்கு தேவையான அளவில் உணவுப்பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், கால்நடை துறையின் சார்பில் போதிய முகாம்கள் நடத்திடவும் பருவமழை காரணமாக உயரிழக்கும் கால்நடைகள் குறித்த விவரத்தினை விரைவாக உடற்கூராய்வு செய்து குறித்த காலத்திற்குள் காலதாமதமின்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் எனவும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் விஜயலெட்சுமி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.