காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்து சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு பாடநூல் கழக மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்கள் போக மீதமுள்ள புத்தகங்கள் நிலை, வருங்காலத்தில் தேவைப்படும் எண்ணிக்கை குறித்தும் வட்டார அலுவலரிடம் கேட்டறிந்தார்.பின்னர், திண்டுக்கல் ஐ.லியோனி நிருபர்களிடம் பேசுகையில்; `தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு இருக்கும் தைரியம் கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. ஓரணியில் தமிழ்நாடு என்ற நிகழ்ச்சிக்காக நான் பல்லாவரத்திற்கு சென்றபோது, தமிழக அரசின் செயல் திட்டங்களை பார்த்து அதிமுகவினரே திமுகவுக்கு வாக்களிக்கும் நிலை இன்னும் மூன்று மாதத்தில் உருவாகிவிடும்.அதிமுக பாஜ கூட்டணி பிரிந்தபோது, வெடி வெடித்து லட்டு கொடுத்து கொண்டாடிய அதிமுகவினர், தற்போது மீண்டும் இணைந்த நிலையில் அதை கொண்டாட கூட இல்லாத வெறுப்பு சூழ்நிலை உள்ளது.
மேலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நர்சரி பள்ளிக்கூட முதல்வராக தகுதிக்கூட இல்லை. பக்கம் பக்கமாக பேப்பரை வைத்துக்கொண்டு பேசியும் வொர்க் ப்ரம் ஹோம் எனும் நிலையிலேயே கட்சியை நடத்திக்கொண்டு வருகிறார். மக்களிடம் செல், மக்களிடம் பழகு, மக்களிடம் கற்றுக்கொண்டு, அதற்கு ஏற்பபணி செய் என கற்றுக்கொடுத்த காஞ்சி பேரறிஞர் அண்ணாவின் வழியில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது’’ என்றார்.நிகழ்வின்போது, காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், காஞ்சிபுரம் வட்டார தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.