குப்பைகளை அகற்ற கோரிக்கை அனைத்து தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்கள் மனு
ஈரோடு,ஜூலை8: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட ஈரோடு மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் ஆட்டோ ஓட்டுநர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தற்சமயம் அரசால் அனுமதிக்கப்படாத ரேபிடோ எனும் இருசக்கர பைக் டாக்சிகள் வாடகைக்கு இயக்கப்படுகின்றன. இது போக்குவரத்து சட்ட விதிகளுக்கு முரணானது ஆகும். எனவே, இந்த பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்.மாவட்ட எல்லை தாண்டிய பயணம்,உதாரணமாக ஈரோடு காவிரி ஆற்றின் மறு கரையில் உள்ள பள்ளிபாளையம் பகுதிக்கு பயணிக்கும்போது, அதிகாரிகளால் விதிக்கப்படும் அபராதங்கள் மிகக் கடுமையாக உள்ளது. இதை கைவிட வேண்டும்.
தவிர, நடைமுறையில் உள்ள வாகனப்பதிவில் உள்ள விலாசத்தில் இருந்து 30 கி.மீ வர பயணிக்க பர்மிட் இருப்பதால் ஆட்டோக்களை ஜம்பிங் பர்மிட் மூலமாக அனுமதிக்க வேண்டும்.ஏற்கனவே வாகன இன்சூரன்ஸ், பர்மிட், டேக்ஸ், பெட்ரோல், கேஸ், வாகன உதிரி பாகங்களின் கடுமையான விலையேற்றம் காரணமாகவும்,மகளிர் பேருந்து,மினி பஸ்,ஷேர் ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்களின் சேவையாலும் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பைக் டாக்சிகள் மூலமாகவும் எங்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், அவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.