சென்னை சென்ற ரயிலில் பெண்ணிடம் 17 பவுன் நகை அபேஸ்
திருமங்கலம், ஜூலை 11: சென்னையில் உள்ள மேடவாகத்தினை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி(27). சென்னையில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜபுரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்விக்கு, இங்கு சொந்த வீடு உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க தமிழ்ச்செல்வி வந்திருந்தார். பின்னர் கடந்த 2ம் தேதி சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து பயணித்தார்.
அப்போது தங்கமுகப்பு செயின், கல்தோடு உள்ளிட்ட 17 பவுன் நகைகளை பேக்கில் வைத்திருந்தார்.
சென்னை சென்று பார்த்த போது ரூ.15 லட்சம் மதிப்பிலான அவரது நகைகள் மாயமாகிருந்தது. திருமங்கலத்திலிருந்து சென்னை வருவதற்குள் ஓடும் ரயிலில் மர்ம நபர் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி, நடந்த சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.