உலகின் 7 கண்டங்களின் உயரமான மலைகள் மீது ஏறி சாதனை படைத்த பெண்ணுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
போரூர், ஜூலை 9: உலகின் 7 கண்டங்களின் உயரமான மலைகளின் மீது ஏறி சாதனை படைத்த பெண்ணுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஜோக்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் உலகில் உள்ள 7 கண்டங்களின் உயரமான மலை சிகரங்கள் மீது ஏறி சாதனை படைக்க திட்டமிட்டு, பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதை தொடர்ந்து, கடந்த 2023ம் ஆண்டு, மே மாதம் 23ம் தேதி, உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தார். முத்தமிழ்ச்செல்விக்கு, தமிழ்நாடு அரசு, கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தது. மேலும் முத்தமிழ்ச்செல்விக்கு அரசு சார்பில் பல்வேறு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.
இதையடுத்து மீதமுள்ள 6 கண்டங்களில் உள்ள, உயரமான மலை சிகரங்கள் மீது ஏறி சாதனை படைத்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி, 7வது கண்டமாக, வட அமெரிக்காவின் தெனாலி மலை சிகரத்தில் ஏறினார். இதன் மூலம் மிகக் குறைந்த காலத்தில், உலகின் 7 கண்டங்களில் உள்ள, சிகரங்களை ஏறிய, இந்தியாவின் முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். சாதனை பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அமெரிக்காவிலிருந்து நேற்று விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஆ.மனோகரன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, முத்தமிழ்ச்செல்வி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நிறைய வலிகளை தாண்டி, 7 கண்டங்களில் உள்ள மலைகளை ஏறி முடித்துள்ளேன். இந்த சாதனையை படைக்க உதவியவர் முதலமைச்சர். அவரை அப்பா என்று கூட அழைக்கலாம், அப்பாவிற்கு நன்றி. மலையேற்றம் குறித்து எதுவும் தெரியாதபோது, நம்பிக்கை தந்து, துணை முதலமைச்சர் உதவியதால்தான், 7 கண்டங்களை ஏறி சாதனை படைக்க முடிந்தது. அவ்வாறு உதவியவர்கள் மூலமாக, வெற்றி அடைந்தேன். எவரஸ்ட் சிகரம் ஏறும்போது, எனக்கு எந்த வித அனுபவமும் இல்லை. ஆனால் நம்பிக்கை இருந்தது. வட அமெரிக்காவில் உள்ள தெனாலி மலை ஏறுவது மிகவும் சிரமமாக இருந்தது. 80 கிலோ எடையை தொடர்ந்து, 8 நாட்கள் இழுத்துக்கொண்டு சென்றேன். மலையின் உச்சியில், மூச்சு விட சிரமமாக இருந்தது. குடிக்க தண்ணீர் இல்லாமல், 16 மணி நேரம், மலை உச்சியில் இருந்தேன். என்னுடன் வந்த கேரளாவைச் சேர்ந்தவர், சாட்டிலைட் மூலமாக, கேரள அரசுக்கு தகவல் கொடுத்தார். கேரள முதலமைச்சர், பிரதமருக்கு தெரிவித்ததால், உதவிகள் கிடைத்தன.
செல்போன்களை குழந்தைகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு மலையேற்றத்தில் ஆர்வம் இருக்குமேயானால், அது எல்லை பாதுகாப்பு பணிக்கு உதவியாக இருக்கும். நமது நாட்டில் மற்ற விளையாட்டுகளுக்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்துவது போல், மலையேற்றத்துக்கும் ஊக்கம் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும். மலை ஏற்ற வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கி, வேலை வாய்ப்புக்கு உறுதி தந்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு விஷயத்தில் உள்ள பயத்தை போக்க வேண்டும். நம்பிக்கையுடன் இருந்தால், நிறைய கற்றுக் கொள்ள முடியும். நான் மலையேற்ற வீரர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.