வாராந்திர சிறப்பு குறைதீர்வு கூட்டம் எஸ்பி சுதாகர் தலைமையில் நடந்தது திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில்
திருவண்ணாமலை, அக்.10: திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர்வு கூட்டம் எஸ்பி சுதாகர் தலைமையில் நேற்று நடந்தது. திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், வாரந்தோறும் புதன்கிழமையன்று நடைபெறும் சிறப்பு குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை எஸ்பி சுதாகர் பெற்று விசாரணை நடத்தினார். அதில், கூடுதல் எஸ்பிக்கள் பழனி, சவுந்தரபாண்டியன் மற்றும் டிஎஸ்பிக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று நடந்த கூட்டத்தில் மொத்தம் 32 புகார் மனுக்கள் பெறப்பட்டன. மனு அளித்தவர்களிடம் எஸ்பி சுதாகர் தனித்தனியே புகார்களை கேட்டறிந்தார். மேலும், ஒவ்வொரு மனுவையும் முறையாக கணினியில் பதிவேற்றம் செய்து ஒப்புகை ரசீது வழங்கவும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து முழுமையாக தீர்வு காணவும் எஸ்பி உத்தரவிட்டார்.
இந்நிலையில், கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் நில பாகப்பிரிவினை செய்த பிறகும் அதை பயன்படுத்த முடியாமல் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டார். அதேபோல், செய்யாறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக மனு அளித்தார். அதன் மீது மகளிர் போலீசார் நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டார்.