கொல்லிமலை அன்னாசி பழத்திற்கு தனி மவுசு
திருப்பூர், ஜூலை 23: திருப்பூர், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் அன்னாசி பழங்களே அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. இவை ஆண்டு முழுவதும் கிடைப்பதால் 80 முதல் 100 ரூபாய் வரையிலும், சீசன் சமயங்களில் 50 முதல் 70 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது திருப்பூருக்கு, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் இருந்து அன்னாசி பழங்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூலை வரை சீசன் காலமாக கருதப்படும் கொல்லிமலை அன்னாசி பழங்கள், சற்று வித்தியாசமாக காணப்படுகிறது.
மற்ற வகை அன்னாசி பழங்களில் தோல் பச்சை நிறத்தில் இருக்கும் நிலையில் இதன் தோல் செந்நிறத்தில் இருப்பதோடு ருசியும் அதிகம். மற்ற பழங்களை காட்டிலும் இதில் உள்ள தனிச்சுவைக்காகவே பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது பல்லடம் சாலை ஊத்துக்குளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு வாகனங்களில் விற்கப்படும் இந்த பழங்கள் சீசன் முடிவடையும் நேரத்தில் வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக கிலோ 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.