உலக நன்மை வேண்டி சிவன் கோயிலில் மகா ருத்ரயாகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருமயம், ஜூலை 23: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான தென் கைலாயம் என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற நெடுங்குடி பிரசன்ன நாயகி சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் உலக நன்மை வேண்டியும், பக்தர்கள் அனைவரது வேண்டுதலும் நிறைவேற வேண்டியும் பெரும் பொருட் செலவில் மகா ருத்ர யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான மகா ருத்ர யாகம் நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று மாலை கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், திருமுறை பாராயணம் தொடர்ந்து தீபாராதனை பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் ருத்ர ஜபம், ருத்ர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சரியாக மதியம் 12 மணி அளவில் மகா பூர்ணாஹூதி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலை வேள்வியில் பழங்கள், மலர்கள், வாசனை திரவியங்கள், தானியங்கள் உள்ளிட்டவைகள் வேள்வியில் இட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
இது போன்ற யாகம் வளர்ப்பதால் உலகம் நன்மை அடைந்து பக்தர்களின் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என நம்பப்படுகிறது.விழாவில் பிரபல சிவாச்சாரியார் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் கலந்துகொண்டு யாக வேள்வி நடத்தினார்.மேலும் யாகத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வந்திருந்து பிரார்த்தனை செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ருத்ர ஹோம விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.