வனத்துறை அலுவலகம் உள்ளே அறுந்து கிடந்த பட்டம் நூலில் காகம் சிக்கியது: பறவைகள் பாசப்போராட்டம், தீயணைப்பு துறையினர் மீட்டனர்
ஒடுகத்தூர், ஜூலை 28: ஒடுகத்தூர் வனத்துறை அலுவலகம் எதிரே உள்ள மரக்கிளையில் அறுந்து கிடந்த பட்டம் நூலில் சிக்கி தவித்து கொண்டிருந்த காகத்தை தீயணைப்பு துறையினர் நேற்று போராடி மீட்டனர். ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு அண்ணா நகர் வனத்துறை அலுவலகத்தின் உள்ளே ஒரு மரக்கிளையில் அறுந்து கிடந்த பட்டம் நூலில் காகம் ஒன்று சிக்கி தவித்து கொண்டிருந்தது.
இதனை பார்த்த மற்ற காகங்களும் பாசத்தால் கூட்டமாக அப்பகுதியை வட்டமடித்தபடி கத்தி கொண்டு சுற்றி கொண்டிருந்தது. இதனை பார்த்த வார்டு கவுன்சிலர் ஜெயந்தி வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காகத்தை மீட்க முயன்றனர். ஆனால், மரத்தின் அருகிலேயே மின்கம்பம் இருந்ததால் சற்று தாமதம் ஏற்பட்டது.
பின்னர், மின்சார துறை அதிகாரிகளிடம் தகவலை எடுத்து சொல்லி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மரத்தின் மீது ஏறி மரக்கிளையில் பட்டத்தின் நூலில் சிக்கிய காகத்தை மீட்டனர். மேலும், அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதனை பத்திரமாக பறக்க விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.