பிரதான குடிநீர் குழாயில் விரிசல் செயற்கை நீரூற்று போல வெளியேறி வீணான குடிநீர்
திருப்பூர், ஜூலை 14: திருப்பூர் மாநகரில் உள்ள பொது மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து 2,3 மற்றும் 4வது குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பூருக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. பிரம்மாண்ட குழாய்கள் அமைத்து திருப்பூருக்கு கொண்டுவரப்படும் குடிநீர் இங்குள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு அந்தந்த வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் ஆலங்காடு பகுதியில் நொய்யல் ஆற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்லப்படும் குடிநீர் செயற்கை நீரூற்று போல வெளியேறி வீணாகி வருகிறது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நேற்று காலை முதல் குடிநீர் வெளியேறிய நொய்யலாற்றில் கலந்து வீணானது. இதுபோன்று கசிவு ஏற்பட்டு வீணாகும் குடிநீரை சேமிக்க குடிநீர் வாரிய அலுவலர்கள் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்தும் பழைய நிலையிலும் உள்ள குழாய்களை மாற்றி சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.