பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு; வாலிபர்களுக்கு வலை
தர்மபுரி, ஜூலை 8: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசமணி. இவரது மனைவி முனியம்மாள் (36). இவர் மருந்து கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, முனியம்மா டூவீலரில் பாப்பாரப்பட்டி அருகே ஏஜிஅள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கடத்தூர் அருகே ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில், முனியம்மா கழுத்திலிருந்த 5 பவுன் தாலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயின் பறிப்பு கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.