வெறிநாய் கடித்து குதறியதில் குழந்தை உட்பட 5பேர் காயம்
திருப்பூர்,டிச.8: திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகிறது. அதில் வெறிநாய் ஒன்று இரண்டு,நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்களை துரத்தி வந்தது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நித்திஷ் (6) மற்றும் கிருஷ்ணன் (74) உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறியது. இதில், நித்திஷிற்கு வலது காலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணன் என்ற முதியவரின் வலது கை நடு விரல் துண்டானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர மன்ற தலைவர் குமார்,கவுன்சிலர் பாரதி மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை உடனடியாக அவிநாசி மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய நாயை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் தனியார் காப்பகத்தில் ஓப்படைத்தனர்.