கஞ்சா விற்ற 4 பேர் கைது
ஈரோடு, ஜூலை 7: ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ஈரோடு மரப்பாலம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்ததில் அவர் ஒடிசா மாநிலம், சுபமபூர் கொட்ச மலை பகுதியை சேர்ந்த தீபராஜ் தாபா (22), என்பதும், தற்போது ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. அவரை சோதனையிட்டதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த ரூ.900 மதிப்பிலான 90 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதே போல, ஈரோடு வடக்கு போலீசார் கனிராவுத்தர்குளம், காந்தி நகர், முள்புதர் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரியசேமூர், மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த சூர்யா (25), மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ.1,500 மதிப்பிலான 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தெற்கு போலீசார், மேற்கொண்ட சோதனையில், சென்னிமலை ரோடு, ரயில்வே கூட்ஷெட் அருகில் கஞ்சா விற்ற ரங்கம்பாளையத்தை சேர்ந்த மனோ (24), என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.