மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 340 கோரிக்கை மனுக்கள்
நாகர்கோவில், ஜூலை 8 : குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 340 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட கலெக்டர் அழகுமீனா, துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை பாபு, நாகர்கோவில் ஆர்.டி.ஒ காளீஸ்வரி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சிவகாமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாரதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் ராஜன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர், உதவி ஆணையர் கலால் ஈஸ்வரநாதன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பத்மபிரியா, கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.