தா.பழூர் அருகே சொத்து தகராறில் 3 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
தா.பழூர், ஜூலை 14: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி ராசாத்தி, மகன் அருள்செல்வன். இவர்களுக்கு அதே கிராமத்தில் ஒரு இடம் தொடர்பாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக எதிர் தரப்பினரோடு ஏற்பட்ட மோதல் குறித்து, தா.பழூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து கடந்த வாரத்தில் விசாரித்த தா.பழூர் போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நேற்று குடும்பத்தோடு ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இது குறித்து ஏற்கனவே தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் விரைந்து சென்று அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி உள்ளனர்.
அப்போது அவர்கள் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டதோடு மண்ணெண்ணையை பிடுங்க முயற்சி செய்த போலீசார் மீதும் ஊற்றியதாக கூறப்படுகிறது. இது எதிர்பாராத விதமாக நடந்ததா அல்லது திட்டமிட்டு போலீசார் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதா என்பது தெரியாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை போலீசார் பிடுங்கினர்.
மேலும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இரண்டு பசு மாடுகளுடன் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தர்மராஜ், அருள்செல்வன், ராசாத்தி ஆகியோரை குண்டு கட்டாக கைது செய்து தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.முன்னதாக, மறியலில் ஈடுபட்டதால் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.