நிலுவை கடன் வசூலிக்க 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு: கூட்டுறவு இணை பதிவாளர் தகவல்
வேலூர், ஜூலை 24: கூட்டுறவு வங்கிகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்பு திட்டத்திற்கு செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கி உள்ளதாக இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிலுவை இனங்கள் பிரிவில் கடன் பெற்று, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ல் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக்கடன் தீர்வுத்திட்டம்-2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து இணைப்பு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு தவணை தவறி, நடப்பு 2023 மார்ச் 31ம் தேதி அன்றோ, அதற்கு முன்போ செயல்படாத ஆஸ்தி என வரையறுக்கப்பட்ட கடன்களை இத்திட்டத்தின் கீழ் தீர்வு செய்து கொள்ளலாம்.
இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், 9 சதவீதம் சாதாரண வட்டியுடன், மொத்தமாக 100 சதவீதம் நிலுவைத் தொகையை அரசாணை வெளியிடப்பட்ட 2025ம் ஆண்டு ஜூன் 24 முதல் 3 மாத காலத்திற்குள் ஒரே தவணையில் செலுத்தி தீர்வு செய்து கொள்ளலாம். கடன்தாரர்கள் வட்டிச்சுமையை கணிசமாக குறைக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, 9 சதவீதம் சாதாரண வட்டி விகிதத்தில் நிலுவை தொகையை ஒரே தவணையில் செலுத்தி தங்களது கடன்களை மேற்குறிப்பிட்ட 3 மாத காலத்திற்குள் தீர்வு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.