காரில் கடத்தி வந்த 24 கிலோ குட்கா பறிமுதல்
தர்மபுரி, ஜூலை 23: பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் எஸ்ஐ மணி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மண்ணேரி சஞ்சீவிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இறங்கிய 2 வாலிபர்கள் எதையோ கீழே இறக்கி கொண்டிருப்பதை பார்த்த போலீசார் சந்தேகமடைந்து, அருகில் சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும், 2 வாலிபர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
பிறகு போலீசார் மேற்கொண்ட சோதனையில், காரில் 24 கிலோ குட்கா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.28,000 ஆகும். போலீசார் குட்கா மற்றும் அதை கடத்த பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தப்பியோடிய வாலிபர்கள் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.