தோப்பிற்குள் புகுந்து 200 தேங்காய்கள் திருட்டு
திருப்பூர்,ஜூலை9: பொங்கலூர் அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு மஞ்சப்பூர் பிரிவுக்கு எதிரே உள்ளது.
தற்போது தேங்காய் விலை உச்சத்தில் இருப்பதால் இவரது தோப்பிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தேங்காய்களை திருடி அங்கேயே அதனை உரித்து உள்ளனர். பின்னர் தேங்காய் மட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தேங்காயை மட்டும் திருடி சென்றுள்ளனர்.
சுமார் 200க்கும் மேற்பட்ட தேங்காய்கள் திருடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது தேங்காய் விலை ரூ.40க்கு மேல் விற்பனையாவதால் மர்ம நபர்கள் தேங்காய் திருட்டில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.