2 டிரான்ஸ்பார்மர்களை உடைத்து ரூ.4 லட்சம் காப்பர் கம்பி திருட்டு
தேன்கனிக்கோட்டை, ஜூலை 23: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சாப்ரானப்பள்ளியில் இருந்து மாரசந்திரம் செல்லும் சாலையில், கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்ய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் டிரான்ஸ்பார்மரை உடைத்து, அதில் இருந்த சுமார் ரூ.2.45 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை திருடி சென்றனர். தொடர்ந்து சீனிவாசபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த டிரான்ஸ்பார்மரை உடைத்த மர்மநபர்கள், அதில் இருந்த சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடி சென்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் மின்தடை ஏற்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேன்கனிக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் போலீசார், டிரான்ஸ்பார்மர்கள் உடைத்து காப்பர் கம்பிகள் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக டிரான்ஸ்பார்மர்கள் உடைப்பு மற்றும் காப்பர் கம்பிகள் திருட்டு நடந்து வருகிறது.
இரவு நேரத்தில் கிராமங்களின் அருகில் சாலையோரம் உள்ள டிரான்ஸ்பார்மர்களை கும்பல் உடைத்து காப்பர் கம்பி திருட்டில் ஈடுபட்டு வருவதால் மின்வாரியத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ள மர்ம கும்பலை முற்றிலுமாக கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.