நாகர்கோவிலில் ஒன்றே கால் கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது: செல்போன்கள் ஆய்வு
நாகர்கோவில், ஜூலை 15: நாகர்கோவிலில் ஒன்றே கால் கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் கோட்டார் எஸ்.ஐ. முகுந்த், தலைமையிலான போலீசார் கோட்டார் பகுதியில் நேற்று காலை ரோந்து பணியில் இருந்தனர். அப்போது ஒழுகினசேரி ஆறாட்டு ரோடு ரயில்வே டிராக் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் வாலிபர்கள் சிலர் நிற்பதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (30), மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த சந்துரு (25) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களின் வீடுகளிலும் போலீசார் சோதனை செய்தனர். வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டன. இனம் தெரியாத நபரிடம் இருந்து வாங்கியதாக கூறி உள்ளனர். இவர்களின் செல்போன் அழைப்புகளின் அடிப்படையில் இவர்களின் கூட்டாளிகள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.