கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 11,268 மனுக்கள் வருகை
கரூர், ஜூலை 23: கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 11,268 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல் தெரிவித்துள்ளார், கரூர் மாநகராட்சி மற்றும் மண்மங்கலம் வட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கடந்த 15.07.2025 முதல் நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் -3 காந்திகிராமம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி, கருப்பம்பாளையம் ஊராட்சி மற்றும் திருக்காட்டுத்துறை ஊராட்சி ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 15.07.2025 முதல் 18.07.2025 வரை இத்திட்டத்தின் மூலம் 15 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இம்முகாம்கள் மூலம் மகளிர் உரிமை திட்டத்தில் 4,647 விண்ணப்பங்களும் மற்றும் 6,621 இதர விண்ணப்பங்களும் என மொத்தம் 11,268 விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து வரபெற்றுள்ளது. இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியுடைய நபர்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுவது குறித்து தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு இம்முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து நகர்புற மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஒலிப்பெருக்கி, துண்டு பிரசுரங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாமில் தங்களுக்கு தேவையான அரசின் சேவைகள் குறித்து விண்ணப்பித்து பயன்பெறலாமென ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தாட்கோ மூலம் 20 தூய்மைப் பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் 1 பயனாளிக்கு பழச்செடி தொகுப்பும், தொழிலாளர் நலத்துறையின் சார்பாக 1 நபருக்கு ஓய்வூதிய ஆணையும், கரூர் மாநகராட்சியின் சார்பில் 2 பேருக்கு சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ரசீதும், 1 நபருக்கு காலிமனை வரி விதிப்பு ரசீதும் மற்றும் தமிழ்நாட மின்சார வாரியத்தின் சார்பாக 1 நபருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணையும் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் கவிதா, ஆணையர் சுதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், துணை மேயர் சரவணன், 3-ம் மண்டலக்குழு தலைவர் ராஜா, தாட்கோ மாவட்ட மேலாளர் முருகவேல் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.