ஆறுகாணி அருகே வனப்பகுதியில் 10 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்: தப்பியோடியவருக்கு போலீஸ் வலை
அருமனை, ஜூலை 15: ஆறுகாணி அருகே வனப்பகுதியில் 10 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆறுகாணி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட வெள்ளருக்குமலையில் உள்ள வனப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பாரப்பன் (55) என்பவர் சாராயம் காய்ச்சுவதாக எஸ்.பி. ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் ஆறுகாணி போலீசார் நேற்று முன்தினம் வெள்ளருக்குமலையில் உள்ள பாரப்பன் வீட்டுக்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்த பாரப்பன் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார்.
தொடர்ந்து போலீசார் சாராயம் காய்ச்சிய இடத்தை தேடி சென்றனர். அப்போது வீட்டுக்கு பின் பகுதி வழியாக செல்லும் வனப்பகுதியில் பைக் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத ஒற்றையடி பாதையில் பாரப்பன் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சிய இடத்தை போலீசார் கண்டு பிடித்தனர். பின்னர் போலீசார் அங்கிருந்த 10 லிட்டர் சாராய ஊறல் மற்றும் தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய பாரப்பனை தேடி வருகின்றனர்.