Friday, May 24, 2024
Home » கெளரி விரதங்கள் பல பல… நன்மைகள் பல… பல…

கெளரி விரதங்கள் பல பல… நன்மைகள் பல… பல…

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கெளரி விரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதிதேவியை பூஜைசெய்து அருளை பெறுவதாகும். கெளரி என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று பொருள். ஆகவேதான் சுக்லபட்சத்தில் (வெளுத்த பட்சத்தில்) அம்பாள் பூஜிக்கப்படுகிறாள். ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) இந்த கெளரி விரதம் வருகிறது. அனைத்து கெளரி பூஜைகளிலும் நியமங்கள் பூஜைகள், ஒரே மாதிரிதான் என்றாலும், ஒவ்வொரு மாதமும் அந்தந்த பெயருக்கேற்ப சில மாறுதல்களும் உண்டு. எல்லா கெளரி விரதம் பூஜைகளிலும் சிவனையும், அம்மனையும் சேர்த்து பூஜை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மரத்தடியில் இந்த பூஜை செய்யப் பட வேண்டும். அந்தந்த மரத்தின் ஒரு குச்சியை, உங்கள் வீட்டில் பூஜைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டியதுதான். அம்மரத்தின் இலைகளை பறித்து வந்து, பூஜை மண்டபத்தை அலங்கரித்து அல்லது அந்த இலைகள் மீது அம்மனை வைத்து பூஜிக்கலாம். கெளரிவிரதம் அனுஷ்டிக்கும் சுமங்கலி பெண்கள், பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் விரதமிருந்து, மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் இந்த கெளரி பூஜையை செய்ய வேண்டும். சிவனும் பார்வதியும் சேர்ந்திருக்கும் விக்கிரகம் அல்லது படத்தை, ஒருகோலம் போட்ட பலகையின் மேல் கிழக்கு பார்த்து வைக்கவும்.

அம்மனுக்கு வலப்புறம் நெய்தீபமும் இடது புறம் எண்ணய் தீபமும் வைக்கவும். `விரத பூஜா விதானம்’ புத்தகத்தில் உள்ள மங்கள கெளரி விரதம் பூஜை போல் எல்லா பூஜையையும் செய்ய வேண்டும். அம்மனுக்கு எதிர்திசையில் உட்கார்ந்து கொண்டு கெளரி பூஜை செய்துவிட்டு, அருகிலுள்ள சிவன் கோயில் சென்று சிவனையும், அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு, பூஜையில் நிவேதனம் செய்ய வேண்டும்.

செய்த நிவேதனங்களை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தனது குடும்பத்துடன் பக்தியுடன் சாப்பிட வேண்டும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படவும், அன்பு, பாசம் ஏற்படவும், பார்வதியை பூஜிக்க வேண்டும் என்கிறார், ஸ்ரீசுகாச்சார்யார், ஸ்ரீமத் பாகவத புராணத்தில்.

ஸம்வத்ஸர கெளரி விரதம்

சைத்ர மாத சுக்ல பட்சம் பிரதமை திதி அன்று இந்த பூஜை செய்வதால், குடும்பத்தில் திருமணம், கிருஹபிரவேசம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் அந்த வருடம் கைகூடும்.

சௌபாக்கிய கெளரி விரதம்

சைத்ர மாத சுக்ல பட்சம் த்ருதீயை திதி அன்று இதை செய்வதனால், படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கும். உழைப்புக்கேற்ற பலன் கிட்டும். பலவகையிலும் அதிருஷ்டம் கிடைக்கும்.

வார்த்தா கெளரி விரதம்

வைசாக மாதம் சுக்ல பட்சம் சதுர்த்தி திதியில், வார்த்தா கெளரி விரதம் செய்வதால், தகுந்த நபரிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வந்து சேரும்.

புன்னாக கெளரி விரதம்

ஜ்யேஷ்ட மாதம் சுக்லபட்சம் த்விதியை திதியில் புன்னை மரத்தடியில் அல்லது புன்னை மரத்து இலைகள், பூக்கள் மீது அம்பாளை வைத்து பூஜை செய்யவும். புன்னை இலைகளால், புன்னை பூக்களால் அர்ச்சனை செய்யவும். இதனால் மனதிலுள்ள ஆசாபாசங்கள் நீங்கி, மனம் அமைதியாக இருக்கும்.

கதளீ கெளரி விரதம்

ஜ்யேஷ்ட மாத சுக்ல பட்சம் சதுர்த்தி திதி அன்று வாழை மரத்தடியில், வாழை இலை மீது அம்மனை வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜையில் 108 வாழை பழங்கள் நிவேதியம் செய்து, அதை எட்டு வயதுள்ள சிறுமிகளுக்கு தர வேண்டும். இதனால், ஜாதகத்தில் சுக்ர கிரஹத்தால் ஏற்பட்டுள்ள `களத்ர தோஷம்’ நீங்கி திருமணம், குழந்தைசெல்வம் போன்ற நன்மைகள் கிட்டும்.

சமீ கெளரி விரதம்

ஆஷாட மாதம் சுக்லபட்சம் பஞ்சமி திதி அன்று வன்னி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். அல்லது, வன்னி மரத்து கிளைகளை கொண்டு வந்து அதன் நடுவில் அம்மனை வைத்து கெளரி பூஜை செய்ய வேண்டும்.

வன்னிமர இலைகளால் அஷ்டோதிரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். கல்வியில் நாட்டம், தேர்வில் வெற்றி, நல்ல அறிவாற்றல், கூர்மையான புத்தி, ஞாபக சக்தி ஆகியவை கிட்டும்..

ஸ்வர்ண கெளரி விரதம்

ஷ்ராவண மாத சுக்ல பட்சம் த்ருதியை திதியில், தங்க நகைகளில் அம்மனை ஆவாஹணம் செய்து, தங்க நகைகளால் விசேஷ அலங்காரம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

இதனால், குடும்பத்தில் தங்கம் வாங்கும் சக்தி; வசதி, அதிர்ஷ்டம் கிடைக்கும். தங்க ஆபரணங்கள் போட்டுக்கொள்ளும் யோகமும் கிட்டும்.

ஹரிதாளிகா கெளரி விரதம்

ஹரிதாளம் என்பது ஒரு வாசனைப் பொருள். இதை தமிழில் அரிதாரம் என்பார்கள். நிறைய வாசனைப் பொருட்களால் அம்மனை அலங்கரித்து, பூஜை செய்பவரும் வாசனைத் திரவியங்களை பூசிக்கொண்டு, வாசனையுள்ள மலர்கள் இருக்கும் செடிக்கடியில் அம்மனை வைத்து பூஜிக்க வேண்டும்.

இதனால், பல நன்மைகள் கிடைக்கிறது. நாம் எதிர்பாராமல் நமக்கு நேரும் அனைத்து விபத்துகளிலிருந்தும் அம்மன் அருளால் விடுபட்டுவிடலாம்.

அனந்த கெளரி விரதம்

பாத்ரபத மாத சுக்ல பட்சம் சதுர்தசி திதியில் செய்ய வேண்டிய விரதம். பாம்புகளின் தலைவர்களில் ஒருவனுக்கு அனந்தன் என்று பெயர். பாம்புப் புற்று அருகில் அல்லது பாம்பு விக்கிரஹம் அல்லது பாம்புப் படம் அருகில் அம்மனை வைத்து பூஜைசெய்ய வேண்டும். இதனால், முடிவற்ற குறைவற்ற செல்வமும், நிம்மதியும் கிட்டும். ராகு – கேதுக்களால் ஏற்படும் சர்ப்ப தோஷம் விலகும்.

மாஷா கெளரி விரதம்

பாத்ரபத மாதம் கிருஷ்ண பட்சம் அமாவாசை திதியில் இந்த விரதத்தை கடைப்பிடிப்பது விசேஷம். `மாஷம்’ என்றால் உளுந்து. உளுத்தம் பருப்பு உபயோகித்து செய்யும் எல்லா பொருட்களும் நிவேதியம் செய்து பூஜை செய்யலாம். இதனால், பித்ரு சாபம், பித்ரு தோஷங்கள் ஆகியவை நீங்கி வம்சம் விருத்தியாகும்.

பிரஹதி கெளரி விரதம்

பாத்ரபத மாத கிருஷ்ண பட்சம் த்ருதியை திதி அன்று பிரஹதி கெளரி விரதம் செய்ய வேண்டும். `பிரஹதி’ என்றால் கண்டங்கத்திரிக்காய் என்று பொருள். ஆகையால், கண்டங்கத்திரிக்காய் செடிகள் இருக்கும் இடத்தில் பூஜை செய்ய வேண்டும் அல்லது கண்டங்கத்திரிக்காயை அம்மனுக்கு அருகில் வைத்து பூஜிக்கலாம். கத்திரிக்காய் சாதம் நிவேதியம் செய்ய வேண்டும். இதனால் நாம் விரும்பும் அளவைவிட மிக பெரிய அளவில், நாம் எதிர்பாராத நேரத்தில் நன்மைகள் வந்தடையும்.

தசரத லலிதா கெளரி விரதம்

ஆஸ்வயுஜ மாத சுக்ல பட்சம் தஸமி திதியில் தசரத லலிதா கெளரி விரதம் செய்வது சிறப்பு. `லலிதா’ என்றால் அழகானவள் என்று அர்த்தம். தேர் போல் கோலம் போட்டு, அதன் மேல் அம்மனை வைத்து பூஜிக்க வேண்டும். இதனால் கார், ஸ்கூட்டர், சைக்கிள் போன்ற வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வாகனப் பிரயாணமும் ஆபத்து இல்லாமல் அமையும்.

சந்திரோதய கெளரி விரதம்

ஆஸ்வயுஜ மாத கிருஷ்ண பட்சம் த்விதீயை திதியில், செய்யக்கூடிய விரதம். சந்திரன் உதயமான பிறகு, சந்திரன் கிரணங்கள் விழும் இடத்தில் அம்மனை பூஜிக்க வேண்டும்.இதனால், மனதிலுள்ள குழப்பங்கள் நீங்கும். மனநிலை பாதிக்கபட்டவர்கு ஆரோக்கியம் உண்டாகும். விரைவில், தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க முடியும்.

கேதார கெளரி விரதம்

ஆஸ்வயுஜ கிருஷ்ண பட்சம் அமாவாசை திதி அதாவது தீபாவளி அன்று கேதார கெளரி விரதம் மேற்கொள்ள வேண்டும். `கேதாரம்’ என்றால் விவசாயம் செய்யும் வயல் என்று அர்த்தம்.
வயலின் நடுவில் அல்லது அப்போது விளைந்த பயிர்களின் நடுவில் அம்மனை வைத்து பூஜிக்க வேண்டும். இதனால், விவசாயம் நன்கு செழிக்கும். சத்தான உணவு, தான்யங்கள் குறைவின்றி கிடைக்கும்.

த்ரீலோசன ஜீரக கெளரி விரதம்

கார்த்திக சுக்ல பட்சம் த்ருதியையில் த்ரீலோசன ஜீரக கெளரி விரதம் சிறந்த பலனைத் தரும். அம்மனுக்கும் மூன்று கண்கள் உண்டு. அம்மனை மூன்று கண்களுடன் படம் வரைந்து அல்லது கோலம் போட்டு பூஜிக்க வேண்டும். ஜீரக பொடி சாதம் நிவேதியம், ஜீரகம் கரைக்கப்பட்ட வெந்நீர் நிவேதியம் செய்வதினால் நீண்ட பார்வை கிட்டும். கண்கள் நோய் அகலும்.

கார்திக கெளரி விரதம்

கார்த்திக மாத சுக்ல பட்சம் பெளர்ணமி திதி அன்று கார்திக கெளரி விரதம் முருகனுக்கும் உகந்தது. அதனால், முருகனுடன் சேர்த்து அம்மனை பூஜிக்கவும். முருகனுக்கு தேனும், தினை மாவும் நிவேதிப்பது சிறந்த பலனை தரும். இதனால், சொந்த வீடும், பூமியும் கிடைக்கும். நிலம், வீடு சம்பந்தமான பிரச்னைகள் தீரும். ரத்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

திந்திரிணீ கெளரி விரதம்.மார்கசீர்ஷ சுக்ல பட்சம் துவிதீயை அன்று செய்ய வேண்டும். `திந்திரிணீ’ என்றால் புளி என்று பொருள். புளிய மரத்தினடியில் பூஜை செய்ய வேண்டும். புளிப்புப் பொருட்கள், புளியஞ்சாதம் நிவேதியம் செய்வதால் கருத்து வேறுபாடு நீங்கி, ஒற்றுமை கிடைக்கும்.

பதரீ கெளரி விரதம்

மார்கசீர்ஷ சுக்லபட்சம் சதுர்த்தி திதியில் பதரீ கெளரி விரதம் மேற்கொள்வது சிறந்த தாகும். இலந்தை மரத்தினடியில் அம்மனை பூஜை செய்ய வேண்டும். அதிகளவில், இலந்தைப் பழங்களை நிவேதியம் செய்து, தானும் உண்டு பிறருக்கும் கொடுக்க வேண்டும். இதனால், சிறந்த ஞானம் கிட்டும். வாழ்க்கை இறுதியில் ஆத்ம தரிசனம் கிட்டும். உபநிஷத் கருத்துக்கள் நன்கு புலப்படும்.

திரைலோக்ய கெளரி விரதம்

புஷ்ய மாத கிருஷ்ண பட்சம் தசமி திதியில், திரைலோக்ய கெளரி விரதம் செய்ய வேண்டும். திரைலோக்ய கெளரி விரதத்தை, மூன்று உலகங்களுக்கும் அரசியாக அம்மனை பாவித்து வழிபட வேண்டும். இதனால், நாம் விரும்பும் உயர் பதவி கிடைக்கும். உயர்ந்த அரசு வேலை கிடைக்கும்.

தொகுப்பு: அனுஷா

You may also like

Leave a Comment

6 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi