* இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் ஷர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் நேற்று 16 ஆண்டுகளை நிறைவு செய்தார். அவர் 2007, ஜூன் 23ல் அயர்லாந்துக்கு எதிராக பெல்பாஸ்டில் நடந்த ஒருநாள் போட்டியில், ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமானார். தற்போது 36 வயதாகும் ரோகித், இதுவரை 441 சர்வதேச போட்டிகளில் விளையாடி 17,115 ரன் (43 சதம்) விளாசி உள்ளார்.
* ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற இங்கிலாந்து அணி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கு 18 வயது சுழற்பந்துவீச்சாளர் ரெஹான் அகமதுவை சேர்த்துள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் மொயீன் அலி களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டால், ரெஹான் அகமதுவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
* தெற்காசிய கால்பந்து தொடரில் பாகிஸ்தான் அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தின்போது இந்திய அணி தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாச்சுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டதால் ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டது. இதனால் நேபாள அணியுடன் இன்று நடக்கும் போட்டியில் அவர் பயிற்சியாளராக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செவ்வாயன்று குவைத் அணியுடன் நடக்க உள்ள போட்டிக்கு அவர் பயிற்சியாளர் பொறுப்பேற்பார்.
* இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள செதேஷ்வர் புஜாரா, துலீப் டிராபி போட்டியில் மேற்கு மண்டல அணிக்காக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் கரென் கச்சனோவ் (27 வயது, 11வது ரேங்க்), எதிர் வரும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார். பிரெஞ்ச் ஓபன் காலிறுதியில் ஜோகோவிச்சுக்கு எதிராக விளையாடியபோது கச்சனோவ் முதுகுப் பகுதியில் காயம் அடைந்தார்.
* தைபே ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் நேற்று ஹாங்காங் வீரர் லாங் அங்குஸ் உடன் நேற்று மோதிய இந்திய நட்சத்திரம் எச்.எஸ்.பிரணாய் 19-21, 9-21 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.